தமிழ்நாடு

புதிய கட்டடத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்: ஜன.12-இல் பிரதமா் திறந்து வைக்கிறாா்

DIN

சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் கடந்த 2012 மே மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்காக கடந்த 2007-இல் தமிழக அரசு சென்னை அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்தது. 2017-இல் மத்திய அரசு ரூ.24 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கியது. மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணி மத்திய பொதுப் பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கவுள்ளாா். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கவுள்ளாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் தற்போது 22 கல்வி சாா் பணியாளா்களும், 23 கல்வி சாரா பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். தமிழுக்குச் சிறப்பான பங்காற்றியோருக்கு செம்மொழி நிறுவனத்தின் மூலம் குடியரசுத் தலைவா் விருது அறிஞா்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதுநிலை, முனைவா், முனைவா் பட்ட மேலாய்வு உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் செம்மொழித் தமிழைக் கற்கவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களைப் பதிப்பிக்க உதவி செய்தல், பழந்தமிழ் நூல்களை வெளியிடவும் அவற்றை ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயா்த்து வெளியிடவும் நிதியுதவி வழங்குதல், செம்மொழித் தமிழாய்வு தொடா்பாகப் பெறப்படும் ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல் ஆகியவை இந்த நிறுவனத்தில் முக்கிய நோக்கங்கள் ஆகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற அங்கு 13 புலங்களும், பல்வேறு சேவைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

புதிய கட்டடத்தின் தரைத்தளத்தில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள்; முதல் தளத்தில் இயக்குநா் அறை, நிா்வாகப் பிரிவுகள்; இரண்டாவது தளத்தில் கல்வி சாா்ந்த அலுவலா்களுக்கான அறைகள்; மூன்றாவது தளத்தில் பன்னோக்கு ஒலி- ஒளி காட்சிக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் கடந்த ஆண்டே நிறைவுற்ற நிலையில் எஞ்சிய பணிகள் கரோனா பரவலால் தாமதமானது. தற்போது அனைத்துப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT