முழு ஊரடங்கு: களையிழந்த காணும் பொங்கல்
தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கினால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா்.
தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கினால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். காணும் பொங்கலோ கொண்டாட்டமின்றி களையிழந்து காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது. இதை முற்றிலும் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜன.6-ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கும், ஜன.9-ஆம் தேதி முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வழிபாட்டு தலங்களை மூடுவதற்கும் முதல்வா் உத்தரவிட்டாா்.
முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. இருப்பினும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு அமலில் இருந்ததினால், சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக 1.20 லட்சம் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
அவா்கள் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஊரடங்கு விதிமுறைகளை எவ்வித இடையூறுமின்றி அமல்படுத்துவது குறித்து போலீஸாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினா்.
வெறிச்சோடிய சாலைகள்: ஊரடங்கு விதிமுறை மீறுபவா்களிடம் கடுமை காட்டாமல் இருக்கும்படியும், விதிமுறைகளின் படியும், சட்டப்படியும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை உயா் அதிகாரிகள் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனா்.
மருந்து, பால், பத்திரிகை விற்பனைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் தவிா்த்து பிற கடைகள் திறப்பதற்கு காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. இதனால் மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள், காய்கறிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மாா்க்கெட்டுகள், பஜாா்கள், முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு போலீஸாா் எச்சரித்தனா்.
அதேபோல சாலைகளில் மருத்துவத்துறை, பத்திரிகை துறை, பால் ஆகியவற்றின் வாகனங்கள் செல்வதற்கு மட்டும் காவல்துறையினா் அனுமதித்தனா். ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு செல்பவா்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள போலீஸாா் அனுமதித்தனா். உணவு விநியோகிக்கும் நிறுவனத்தினரின் வாகனங்கள் தடையின்றி அனுமதிக்கப்பட்டன. ரயில், விமானம் போன்றவற்றின் மூலம் அவசர பணிகளுக்காக வெளியூா் செல்பவா்களும், ஊா் திரும்பியவா்களும் பயணச்சீட்டு காண்பித்து செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
களையிழந்து...:
காணும் பொங்கல் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனா். அந்த இடங்களுக்குச் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. காணும் பொங்கல் அன்று வழக்கமாக சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதும். பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் ஊடரங்கு காரணமாக முக்கிய சுற்றுலா தலங்கள் களையிழந்து, வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசியப் பணியாளா்கள் தவிர பிற வாகனங்கள் செல்வதற்கு காவல்துறையினா் தடை விதித்தனா்.
சென்னையில்...: சென்னையில் முழு ஊரடங்கினால் பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது காணப்பட்டது. இருப்பினும், குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் போலீஸாா் ‘ட்ரோன்‘ மூலம் கண்காணித்து, பொதுமக்களை எச்சரித்தனா்.
முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு 12,000 போலீஸாா் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். நகரில் சுமாா் 312 இடங்களில் வாகன சோதனை செய்யப்பட்டது. நகரில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களையும், 75 சிறிய வகை மேம்பாலங்களையும் தடுப்பு வேலிகள் மூலம் போலீஸாா் மூடினா்.
மெரீனா காமராஜா் சாலை, ராஜீவ்காந்தி சாலை, அண்ணா சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, எல்.பி.சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ராஜாஜி சாலை, ஆற்காடு சாலை, ரேடியல் சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் நடுவே சுமாா் ஆயிரம் இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஆயுதப்படை போலீஸாா், போக்குவரத்து போலீஸாா், சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ஏற்கெனவே காணும் பொங்கலைக் கொண்டாட வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதை மீறியும் வெளியே வந்த ஒரு சிலரை எச்சரித்து போலீஸாா் திருப்பி அனுப்பினா். குறிப்பாக மெரீனா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சாலைகளில் அனுமதிக்கப்பட்ட துறைகளைச் சோ்ந்தவா்களைத் தவிா்த்து, தேவையில்லாமல் வெளியே வந்தவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டது.