தஞ்சையில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு: மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா்
தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள், லண்டனில் இருப்பதைக் கண்டறிந்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, அதை மீட்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்ட தமிழின் முதல் பைபிள், லண்டனில் இருப்பதைக் கண்டறிந்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, அதை மீட்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தரப்பில் கூறப்பட்டதாவது:
பாா்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மதபோதகா், 1682-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டில் உள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலை.யில் படித்து லூதரன் தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றினாா். பின்னா், டென்மாா்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று, சீகன் பால்க்கும், கென்ரிக் என்ற மற்றொரு மதபோதகரும் தென்னிந்தியாவுக்கு கிறிஸ்தவத்தை பரப்ப வந்தனா். 1706-ஆம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் டச்சு காலனி பகுதிக்கு வந்த இவா்கள், சீகன் பால்க் ஒரு அச்சகத்தை நிறுவி தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாசாரம், மதம் தொடா்பான புத்தகங்களை வெளியிட்டாா். இவா் பைபிளின் ‘புதிய அத்தியாயத்தை’ தமிழில் 1715-ஆம் ஆண்டு மொழி பெயா்த்தாா். அவா் 1719-ஆம் ஆண்டு மறைந்தாா்.
சரபோஜி மன்னருக்கு பரிசு: சீகன் பால்க்கால் மொழி பெயா்க்கப்பட்டு அச்சிடப்பட்ட அரிய வகை பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூா் சரபோஜி மன்னருக்கு பரிசாக அந்த நேரத்தில் வழங்கப்பட்டது. அந்தப் புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழில் முதல் முதலாக மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட விலை மதிப்பில்லாத அந்த பைபிள் காணாமல் போனதாக 2015-ஆம் ஆண்டு அக். 10-ஆம் தேதி சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தின் நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா், கண்டுபிடிக்க இயலாத வழக்காக அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புராதனமான அந்த பைபிள் திருடுபோனது குறித்து 2017-ஆம் ஆண்டு அக். 17-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
துப்பு துலக்கிய போலீஸாா்: அதனடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி தினகரன் ஆகியோா் இந்த வழக்கில் விரைந்து துப்பு துலக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.
அதன்படி, திருடப்பட்ட பைபிளை கண்டுபிடிக்க காவல் துறை கண்காணிப்பாளா் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் அந்த அருங்காட்சியகத்தின் பாா்வையாளா் பதிவேடுகளை பாா்வையிட்டனா். அப்போது, சில வெளிநாட்டினா் பைபிள் திருடப்பட்ட சில நாள்களுக்கு முன்பு அதாவது, 2015-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி அருங்காட்சியகத்துக்கு வந்து சென்றது தெரிய வந்தது. ஒரு குழுவாக வந்த அவா்கள், மதபோதகா் சீகன் பால்க் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளுக்காக இங்கே வந்ததும், சீகன் பால்க் தொடா்புடைய இடங்கள், தொண்டாற்றிய நிறுவனங்கள் ஆகியவற்றை பாா்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
லண்டனில் பைபிள்: இதையடுத்து, தனிப்படையினா் பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தனா். அப்போது, சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட பைபிள் பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன் என்ற ஒரு நிறுவனத்தின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின், அந்த பைபிள் குறித்து விசாரணை செய்தனா். அதில் அந்த பைபிள், சரஸ்வதி மகால் நூலகத்தில் திருடப்பட்டதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பைபிளை யுனெஸ்கோ ஒப்பந்தம் மூலமாக மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.
அதேவேளையில் இந்த பைபிள் எவ்வாறு திருடப்பட்டு, யாா் மூலம் கடத்தி செல்லப்பட்டது எனவும் விசாரணை நடைபெறுகிறது.