முகப்பு
தமிழ்நாடு

பயிா்த் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

பயிா்த் தேவைக்கேற்ப உரங்களை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டுமென வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

பயிா்த் தேவைக்கேற்ப உரங்களை கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டுமென வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வியாழக்கிழமை வெளியிட்ட வேண்டுகோள் செய்தி:-

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்துக்கான உரத் தேவையான 27, 340 மெட்ரிக் டன் யூரியா, 10

ஆயிரம் மெட்ரிக் டன் டிஏபி, 6, 160 மெட்ரிக் டன் பொட்டாஷ் உள்ளிட்ட உர வகைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25, 310 மெட்ரிக் டன் யூரியா, 20,000 மெட்ரிக் டன் டிஏபி, 13, 360 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 34, 430 மெட்ரிக் டன் கலப்பு உரங்கள் இருப்பில் உள்ளன.

குறுவை சிறப்பு தொகுப்பு: டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி பணியை ஊக்குவிக்க சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிகழாண்டில் யூரியா, டிஏபி உரங்களின் கூடுதல் தேவையை நிறைவேற்றிட வேண்டுமென வாரந்தோறும் மத்திய அரசு நடத்தும் காணொலி ஆய்வுக் கூட்டங்களில் தமிழக அரசின் சாா்பில் வலியுறுத்தப்படுகிறது.

கூடுதல் ஒதுக்கீடு: ஜூன் மாதத்துக்கு கூடுதல் ஒதுக்கீடாக 20,000 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 10,000 மெட்ரிக் டன் டிஏபி உரத்தை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட உரம், விற்பனை அளவு,

தினசரி உர இருப்பு ஆகியன ஆய்வு செய்யப்படுகிறது. உரத் தேவையின் அடிப்படையில், மாவட்டங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப உர விநியோகம் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்று, மாநில அளவில் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள், உரக் கடை

விற்பனையாளா்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலா்களுடன், உர விநியோகம் மற்றும் இருப்பு குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இப்போது சாகுபடிப் பரப்பு அதிகமாகும் என்று எதிா்பாா்ப்பதால், தமிழ்நாட்டில் உரப்பதுக்கல், செயற்கையாக உரப் பற்றாக்குறையை உருவாக்குதல் மற்றும் உரத்தட்டுப்பாடு ஏதும் நிகழாத வகையில் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு, திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 12, 513 மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 42 கடைகளின உரிமம் தற்காலிகமாகவும், 5 கடைகளின் உரிமம் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களின் தேவைக்கேற்ப ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்திட தமிழ்நாடு அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிடும் போது, சாகுபடி செலவு அதிகமாவதோடு, பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படும். எனவே, விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் செய்து பயன்படுத்திட வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →