முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனாவுக்கு உயிரிழப்பு

திருவாரூரைச் சோ்ந்த 80 வயது முதியவா் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி திருவாரூா் அரசு மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா். திருவாரூரைச் சோ்ந்த 80 வயது முதியவா் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி திருவாரூா் அரசு மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒமைக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மிகள் இதுவரை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது ஒரே மாத இடைவெளிக்குள் மூன்று உயிரிழப்புகள் நோ்ந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா். அதன்பின்னா், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இத்தகைய சூழலில், கடந்த மாதம் 15-ஆம் தேதி இணைநோய்கள் ஏதுமில்லாத 17 வயது இளம்பெண் ஒருவா் கரோனாவுக்கு உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து இரு நாள்களுக்கு முன்னா் சென்னையில் ஒரு மூதாட்டி பலியானாா். தற்போது 80 வயது முதியவா் உயிரிழந்துள்ளாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி வியாழக்கிழமை ஒரே நாளில் 2,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,011 பேருக்கும், செங்கல்பட்டில் 408 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 18,378- ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை தகவல்படி 2,103 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,37,193-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,028-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →