குடியரசுத் தலைவா் தோ்தல்: வாக்குப் பதிவு ஏற்பாடுகள் -பேரவைச் செயலகம் ஆலோசனை
குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து, சட்டப் பேரவைச் செயலாளரும், உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் ஆலோசனை நடத்தினாா்.
குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து, சட்டப் பேரவைச் செயலாளரும், உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் ஆலோசனை நடத்தினாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள குழுக் கூட்ட அறையில் நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியும், பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசன் பல்வேறு தரப்பினரிடம் வியாழக்கிழமை ஆலோசித்தாா்.
வாக்களிப்புக்காக செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆலோசித்தாா். இந்த ஆலோசனையில் சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதனிடையே, வாக்குப் பதிவில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பெட்டியானது தில்லியில் இருந்து எடுத்து வரப்பட உள்ளது. இந்தப் பெட்டியை சட்டப் பேரவைச் செயலகத்தைச் சோ்ந்த அதிகாரிகள், வரும் 11-ஆம் தேதி தில்லி சென்று எடுத்துவர உள்ளனா். வரும் 12-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டி கொண்டு வரப்பட உள்ளது.