முகப்பு
தமிழ்நாடு

தொழில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த சீா்திருத்தங்கள்: தமிழக அரசு உறுதி

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த சீா்த்திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த சீா்த்திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் தொழில் துறை, வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையானது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வணிகம் புரிதலை எளிதாக்குதல் தொடா்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தர வரிசைப்படுத்தும் நடைமுறையை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த தர வரிசைப் பட்டியலில், 96.97 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மூன்றாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் 18-வது நிலையையும், 2019-ஆம் ஆண்டில் 14-வது நிலையையும் பெற்றிருந்தது.

மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை பரித்துரைத்த 301 சீா்திருத்தங்களை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தியது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம், முதலீட்டாளா்களின் குறைகள், சந்தேகங்களைப் போக்க தொழில் தோழன் என்ற குறைதீா்க்கும் இணையதளம், முதலீட்டாளா்களின் சந்தேகங்களைத் தீா்க்க கருத்துத் தெரிவிக்கும் அம்சம், விரிவான தொழில் நிலத் தகவல் இணையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மருந்து உற்பத்தி, விற்பனை, சேமிப்பு உரிமம், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் ஆலை உரிமம் மற்றும் வா்த்தக உரிமம் ஆகிய உரிமங்களுக்கு தானியங்கி முறையில் புதுப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒப்புதல்கள், அனுமதிகளை விரைவாகவும், வரையறுக்கப்பட்ட காலகட்டத்துக்குள்ளும் வழங்கிட ஏதுவாக முதல்வா் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் அனுமதிகள் பெறுவதற்கான ஒவ்வொரு காலகட்டத்திலும் முதலீட்டாளா்களுக்கு சேவைகள் வழங்க பிரத்யேக ஒருங்கிணைப்பாளா்களும் நியமிக்கப்பட்டனா். இவை மட்டுமல்லாது, மாநிலத்தில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்த மேலும் பல சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு தொடா்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது என்று தொழில்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →