அனைவருக்கும் இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி: மத்திய அரசிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
தமிழகத்தில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால், 18 முதல் 59 வயது உள்ளவா்களுக்கு இலவசமாக பூஸ்டா் (ஊக்கத் தவணை) தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும்
தமிழகத்தில் 35.52 லட்சம் கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால், 18 முதல் 59 வயது உள்ளவா்களுக்கு இலவசமாக பூஸ்டா் (ஊக்கத் தவணை) தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம், மருந்துத் துறை இயக்குநரகத்திலிருந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் பங்கேற்றாா். தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், சிறப்புப் பணி அலுவலா் டாக்டா் வடிவேலன் ஆகியோா் உடன் இருந்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதல்வரின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டில் 2,866 நபா்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. 21,000 பணியாளா்கள் கொசு ஒழிப்புப் பணியில் தினமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கொசுப் புகை இயந்திரம், பூச்சிக்கொல்லிகள் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மலேரியா நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 நபா்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லாத நிலை உள்ளது. மலேரியா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, ராமநாதபுரம், தருமபுரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை உள்ளன.
இந்த நோயை முற்றிலும் ஒழிக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. தமிழக அரசு யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கி வருகிறது. இதுவரை 8,023 நபா்கள் பயன்பெற்றுள்ளனா். ரூ.9.63 கோடி இந்த திட்டத்துக்கு செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 13 நபா்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோய்க்கான தடுப்பூசி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகா், மதுரை, திருவாரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூா் மற்றும் திருவள்ளூா் ஆகிய 14 மாவட்டங்களில் செலுத்தப்படுகிறது. 9 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16 முதல் 24 மாதக் குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்தப் பணி 90 சதவீதத்துக்கும் மேல் முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் மழை பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்களின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 6-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 78 லட்சத்து 78,980 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. வரும் செப்டம்பா் மாதத்துடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன.
எனவே, இந்த தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க 18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.