திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனம்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிக்க | செல்வ வளங்களைப் பெருக்க உதவும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர்
அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன். இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.