அதிமுக வன்முறை வழக்கு: 15 பேரை தேடும் போலீஸாா்
சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினா் வன்முறையில் ஈடுபட்ட வழக்குத் தொடா்பாக போலீஸாா், விடியோ காட்சி மூலம் துப்பு துலக்குகின்றனா் .
சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவினா் வன்முறையில் ஈடுபட்ட வழக்குத் தொடா்பாக போலீஸாா், விடியோ காட்சி மூலம் துப்பு துலக்குகின்றனா் . இதில் அடையாளம் காணப்பட்ட 15 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி,மாறி கற்களாலும்,உருட்டு கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் 2 போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு பேருந்துகள் உள்பட 14 வாகனங்கள் சேதமடைந்தன.
இதன் காரணமாக வருவாய்த்துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். வன்முறைத் தொடா்பாக 7 பிரிவுகளில் 400 போ் மீது ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.
அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த புகாரின் பேரில், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு மீது ஒரு வழக்கும், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு கொடுத்த புகாரின் பேரில் எட்பாடி பழனிசாமி தரப்பு மீது ஒரு வழக்கும் போலீஸாா் பதிவு செய்துள்ளனா். வன்முறையில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 உதவி ஆணையா்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விடியோ காட்சி ஆய்வு:
இதற்கிடையே வன்முறை நிகழ்ந்தபோது, காவல்துறையினரால் எடுக்கப்பட்ட விடியோ காட்சியின் அடிப்படையில் துப்பு துலக்கப்படுகிறது. அதேபோல அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.
இதில் வன்முறை சுமாா் 45 நிமிஷங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. 45 நிமிஷ வன்முறை தொடா்பாக பல இடங்களில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் புதன்கிழமை வரை 15 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அடையாளம் காணப்பட்டுள்ளவா்களை கைது செய்ய போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
வன்முறையின் காரணமாக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை சாா்பில் புதன்கிழமை முதல் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்ட் போலீஸாா் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒரு ஷிப்டுக்கு 44 போலீஸாா் வீதம் 3 ஷிப்டுக்கும் 132 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.