கள்ளக்குறிச்சி சம்பவங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி சம்பவங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை, ஜூலை 18 என்ற மதிப்புமிக்க நாளில் இத்தகைய சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அரசுத் துறைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முதல்வர் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட முறையிலும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், இன்று காலையில்தான் இல்லம் திரும்பினேன்.
தொற்று என்பது முழுமையாக நீங்கிவிட்டது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறேன். சாதாரணமான காய்ச்சலாக இருக்குமானால், அது குணமடைந்ததும் நம்முடைய பணிகளைத் தொடங்கி விடலாம். கரோனா தொற்று என்பதால், அது மற்றவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக, நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும், சில நாட்களாவது ஓய்வெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், நேரடியாக வந்து விழாவில் பங்கேற்பது இயலாத ஒன்று ஆகிவிட்டது. மற்ற நிகழ்ச்சிகளை ஒத்தி வைப்பது, தள்ளி வைப்பது போல, தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால், காணொலி மூலமாகவாவது பேசி விடுவது என்று நான் முடிவெடுத்தேன்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டமன்றத்தில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது. அத்தனைக்குப் பிறகும் தமிழ்நாடு என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்தியாவில் 100 சிறந்த கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள். இந்தியாவில் மூன்றாவது சிறந்த கலைக்கல்லூரி நம்முடைய சென்னை மாநிலக் கல்லூரிதான். சென்னை மாநிலமாக இருந்து தமிழ்நாடாக மாறியதால் தமிழ்நாடாக மாற்றப்பட்டதால் விளைந்த பயன்கள் இவை. திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததால் ஏற்பட்ட பயன்கள் இவை. இதுதான் சிலருக்குப் பொறாமையாகவும், வயிற்றெறிச்சலாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய ஆட்சியாக உருவாக்க நாம் அனைத்து வகையிலும் முயற்சித்து வரும் இந்த நேரத்தில், அனைவருக்கும் மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவங்கள் அமைந்துள்ளன.
இதையும் படிக்க- கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு
கல்வி நிலையங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்களது சொந்தப் பிள்ளைகளாக நினைத்து அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மாறாக, நடக்கும் எந்தச் செயல்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கிறேன். இந்தச் சோகமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் சேர்ந்து சட்டவிரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள். வன்முறைகள் என்பது வளர்ச்சிக்கு எதிரானவை என்பதை அவர்கள் உணர வேண்டும். அமைதியான தமிழகம்தான் அனைவருக்குமான தமிழகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும். நம்முடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நமக்கு இருக்கும் மொழிப்பற்றும் - இன உணர்வும் - மாநில சுயாட்சிக் கொள்கையும்தான்.
இன்றைக்கு தமிழ்நாட்டையும் தாண்டி வாழும் பல அறிஞர்களும், இதனை நிரூபிக்கும் வகையில் புத்தகங்களை எழுதி வருகிறார்கள்! நம்முடைய கல்வி வளர்ச்சியாக இருந்தாலும், தொழில் வளர்ச்சியாக இருந்தாலும், மக்கள் வளர்ச்சியாக இருந்தாலும், சமூக வளர்ச்சியாக இருந்தாலும் இதனை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மொழிப்பற்றையும், தமிழின உரிமை வேட்கையையும், மாநில சுயாட்சித் தத்துவத்தையும் எந்தச் சூழலிலும் யாருக்காகவும் விட்டுத் தந்துவிடக் கூடாது என்றார்.