தமிழ்நாடு

மகள்களைக் கொன்ற தாய்க்கு 'சோதனை அடிப்படையில் விடுதலை': முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

DIN


சென்னை: நான்கு மகள்களைப் பெற்றெடுத்ததால் கேலி, கிண்டலுக்கு உள்ளானதால் கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த பெண்ணை சோதனை அடிப்படையில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு மகள்களை விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்ற தாயை, விடுதலை செய்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கிக் கொண்டு, உயிரோடிருக்கும் மற்ற இரண்டு மகள்களை, பாலின வேறுபாட்டால் ஏற்படும் எந்த தடைகளும் இன்றி, நல்ல முறையில் கல்வி கொடுத்து, குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வேலூரைச் சேர்ந்த தாய் சத்யாவை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

மகள்களைக் கொன்றதற்கு கடுங்காவல் தண்டனை பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தாய் சத்யா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பாரத சக்ரவர்த்தி, பிறப்பித்த உத்தரவில், குற்றவாளிகள் நன்னடத்தை சட்டம், 1958ன் பிரிவு 4-ன் கீழ், இந்த வழக்கில், பெண்ணை தண்டிப்பதற்கு பதிலாக விடுதலை செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது, நாம் ஒரு சமுதாயமாக நம்மை திருத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால், அவமானப்படுத்தப்பட்டு, அப்பெண், தனது மகள்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது என்பது மிகவும் வேதனையான விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்களது மகள்களின் கல்வி மற்றும் நலன் குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவிக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, சத்யாவின் கணவர் வெங்கடேசனும் உறுதிமொழி பத்திரம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சத்யா, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இதில் 2 மகள்களும் பலியான நிலையில், 2 பெண் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் 2016ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் பொன்னை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 302 மற்றும் 309 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை  'நல்லதங்காள்' கதையுடன் ஒப்பிட்ட நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தனது இரண்டு மகள்களுடன் விசாரணைக்கு ஆஜரான சத்யா, அன்று நடந்த சம்பவம் குறித்து கடும் வேதனையை வெளிப்படுத்தினார். ஆண் பிள்ளைகள் போலவே பெண் பிள்ளைகளும் நல்லவர்கள்தான், இப்போது இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் தனக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியதாக நீதிபதி பாரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT