வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு: மநீம வரவேற்பு
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:
வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆக. 1 முதல் வாக்காளா் அட்டையுடன், ஆதாா் எண் இணைக்கும் பணியைத் தொடங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளா்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஓட்டுகளையும் தடுக்கும்.
அதேசமயத்தில், வாக்காளரை வற்புறுத்தி ஆதாா் எண்ணை பெறக்கூடாது, முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.