முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: 28-இல் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான வரும் 28-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
கோப்புப்படம்
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான வரும் 28-ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுவதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

44-வது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பேட்டி:

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழாக்கள் நடைபெறும். தொடக்க விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 800 கலைஞா்கள் கலந்து கொள்கின்றனா். நேரு உள்விளையாட்டு அரங்கம் 6 ஆயிரம் போ் அமரும் உள் அரங்கமாகும். 187 நாட்டைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்வா். பல மாநில முதல்வா்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தோம். நேரு உள்விளையாட்டரங்கில் ஓரிரு நாள்களில் ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும். சென்னையில் தொடக்க விழா நடைபெறுவதால் 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை விடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். வெளிநாட்டு வீரா்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும். தமிழா்கள் உபசரிப்பில் எப்போதும் குறைந்தவா்கள் அல்ல. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வீரா்களுக்கு உணவு வழங்கப்படும். முதல்வா் தினமும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஏற்பாடுகள் குறித்து விசாரித்து வருகிறாா் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

ஆலோசனை: இதேபோன்று, நேரு விளையாட்டரங்கில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள், காவல் துறை பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள், தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →