கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளி மாணவியின் உடலை சனிக்கிழமை (ஜூலை 23) காலை 7 மணிக்குள் பெற்று, மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டுமென மாணவியின் தந்தை ராமலிங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதன்படி, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தார் நிலையில் இன்று காலை உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சர் சி.வி. கணேசன், எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் உடல், அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏக்களும் உடன் சென்றனர்.
மாணவியின் உடல் இறுதி அஞ்சலிக்கு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து உறவினர்கள், உள்ளூர் மக்கள் கதறி அழும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாணவியின் இறுதிச்சடங்கையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் குறிப்பாக பெரியநெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நான்கு அடுக்கு சோதனைச் சாவடி, இறுதிச் சடங்கில் கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.