தமிழ்நாடு

ஓ.பி.எஸ். துரோக யுத்தம் நடத்துகிறார்: ஆர்.பி.உதயகுமார்

முன்பு தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார் என்று தேனியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

DIN

முன்பு தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார் என்று செவ்வாய்க்கிழமை, தேனியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தேனி, பங்களாமேடு திடலில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:  

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் எனப் பள்ளிகளில் அடுத்து நடந்து வரும் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. திமுக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 

நீட் தேர்வு ரத்து என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அதிமுக ஆட்சியின்போது மின் கட்டண உயர்வை எதிர்ப்பதாகக் கூறியவர்கள், தற்போது மின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். குடும்பத் தலைவிக்கு மாத ஊக்கத் தொகை வழங்குவதாகக் கூறியவர்கள், தற்போது முதியோர் ஓய்வூதியத்தை ரத்து செய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நடத்தியது தர்ம யுத்தம். இப்போது நடத்துவது துரோக யுத்தம். அவருடன் தர்ம யுத்தத்தில் பங்கேற்றவர்கள் தான், தற்போது அவரது உண்மை முகத்தை அடையாளம் காட்டி வருகின்றனர். ஒ.பி.எஸ்.,யின் பலவிதமான சிரிப்புகளுக்கு இப்போது தான் அர்த்தம் புரிந்துள்ளோம். 

அதிமுக வில் உள்ள ஒரே எம்.பி.,யை கட்சியை விட்டு நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என்கிறார். ஓ.பி.எஸ்., ப.ரவீந்திரநாத்குமார் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்துவிட்டால், நான் பொது வாழ்கையை விட்டு விலகி விடுகிறேன். அதிமுகவின் உண்மைத் தொண்டர்களின் உழைப்பாலும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கினாலும் தான் தேர்தலில் வெற்றி பெற்றார்.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, உங்களது ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று அவர் பாராட்டு தெரிவிக்கிறார். அப்படியென்றால், அதிமுக வை கலைத்து விடலாமா. இந்தக் கட்சி எதற்காகத் தோன்றியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா. திமுக என்ற தீய சக்தியை ஒழிப்பதற்காகத் தான் இந்த மக்கள் இயக்கம் உருவானது என்பதை மறந்துவிட்டீர்களா. அதிமுகவை அழித்துவிடத் துடிக்கும் திமுக அரசுடன் நட்புறவு பாராட்டுவது முறையா.

கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெற்றது. ஆனால், பாண்டி மண்டலத்தில் அந்த வெற்றி கிடைத்ததா. எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தாரா. அவரது சொந்தத் தொகுதியைத் தவிர அவர் வேறு எங்கும் சென்று தேர்தல் பணியாற்றவில்லை. ஆனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் தனக்கு வேண்டும் என்கிறார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்படுபவர்கள் என அடுத்தடுத்த கட்டங்களாகப் பட்டியல் வெளியிடுகிறார் ஓ.பி.எஸ்., இப்படியே போனால் அதிமுகவின் 1.99 கோடி தொண்டர்களையும் நீக்கிவிட்டு, அவரும் அவருடன் இருக்கும் 4 பேர் மட்டும் தான் கட்சியில் இருப்பதாக அறிவிப்பு வெளியிடும் நிலை ஏற்படும். அதிமுகவை அழித்து விடலாம் என்று யாராவது கனவு கண்டால், அது வெறும் பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம்புத்தூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்

2026 உலகக் கோப்பை கால்பந்து: 6 பிளே ஆஃப் இடங்களுக்கு தகுதிச்சுற்று

பெரியகுளம் அருகே தீப்பற்றி எரிந்த வேன் சேதம்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு தெற்காசியாவில் 102-ஆவது இடம்

தங்க நகரங்கள்...

SCROLL FOR NEXT