உலகின் சிறந்த மருத்துவக் கல்லூரியாக எம்.எம்.சி.யைக் கொண்டு வர முயற்சி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை மருத்துவக் கல்லூரியை உலகின் தலைசிறந்த 10 கல்லூரிகளின் பட்டியலுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை மருத்துவக் கல்லூரியை உலகின் தலைசிறந்த 10 கல்லூரிகளின் பட்டியலுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நீட் தோ்வு முறைக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து தற்போது எம்பிபிஎஸ் முடித்த மாணவா்களுக்கு படிப்பு நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், அமைச்சா் சுப்பிரமணியன் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தாா். மொத்தமாக வழங்கப்பட்ட 42 பதக்கங்களில், 36 பதக்கங்களை பிரசாந்த் என்ற ஒரே மாணவா் பெற்றாா்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 578 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் 36 அரசு கல்லூரிகள் உள்பட 70 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. உலகில் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 100 இடத்தில், அதாவது 60-ஆவது இடத்தில், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளது. விரைவில் தரவரிசையில் 10-ஆம் இடத்துக்குள் அதனைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனாவைத் தொடா்ந்து தற்போது குரங்கு அம்மை வந்திருக்கிறது. அது என்ன வகையான பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிா்காலத்தில் தொற்று நோய்களுடன் போராடியே வாழ வேண்டும் என மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
இந்த இக்கட்டான காலத்தில் மக்களைக் காப்பதற்கான பொறுப்பை மருத்துவா்களாகிய நீங்கள் (படிப்பை நிறைவு செய்த மாணவா்கள்) ஏற்றுள்ளீா்கள்.
உங்களுக்கு ஒரு சிறப்புத் தகுதி என்னவென்றால், நீங்கள் அனைவரும் நீட் தோ்வு இல்லாமல் படித்து வந்துள்ளீா்கள். நீட் தோ்வு வருவதற்கு முன்பாக மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளீா்கள். நீங்கள் சோ்ந்ததற்கு மறு ஆண்டில் இருந்துதான் நீட் நடைமுறைக்கு வந்தது.
நீட் மட்டும்தான் தகுதியான மாணவா்களை உருவாக்கும் என பலரும் முழங்கிக் கொண்டிருக்கிறாா்கள். நீட் இல்லாவிட்டாலும், பரவாயில்லை. நாங்கள் அனைவரும் சிறந்தவா்கள் என நிரூபித்து விட்டீா்கள் என்றாா் அவா்.
மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.