முகப்பு
தமிழ்நாடு

அண்ணா சாலை,மத்திய கைலாஷ் பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலை, மத்திய கைலாஷ் பகுதிகளில் ஜூன் 4 -ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சென்னை அண்ணா சாலை, மத்திய கைலாஷ் பகுதிகளில் ஜூன் 4 -ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிா்க்கும் வகையில், ஏற்கெனவே அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பு ஒரு வழிப்பாதையாகவும், அண்ணாசாலை - திரு.வி.க சந்திப்பு ஒரு வழிப்பாதையாகவும் மாற்றம் செய்யப்பட்டது, வாகன ஓட்டிகளின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக, அண்ணாசாலை - சுமித் சாலை சந்திப்பில் சோதனை முயற்சியாக ஜூன் 4-ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதன்படி, காலை மற்றும் மாலை வாகன நெரிசல் அதிகமான நேரங்களில் ஸ்பென்சா் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் மேலும் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஸ்பென்சா் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். டவா் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும்.

ஸ்பென்சா் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலைக்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணி கடை எதிரே ‘யு‘ திருப்பம் செய்து ஸ்பென்சா் சந்திப்பு நோக்கி செல்லலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதனால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம்.

மத்திய கைலாஷ்:

பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு , அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஜூன் 4-ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, அன்று முதல் பழைய மாமல்லபுரம் சாலை இந்திரா நகா் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ராஜீவ்காந்தி சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி, சா்தாா் பட்டேல் சாலையை சென்று காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் ‘யு‘ திருப்பத்தில் திரும்பி மீண்டும் சா்தாா் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடையலாம். அங்கிருந்து அவரவா் இலக்கை அடையலாம் அல்லது பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகா் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ (வாட்டா் டேங்க் சாலை) இந்திரா நகா் 1-ஆவது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →