முகப்பு
தமிழ்நாடு

விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபடுவதைக் கொச்சைப்படுத்தலாமா? முதல்வர் கேள்வி

விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபடுவதை வாக்கு வங்கி அரசியல் என கொச்சைப்படுத்தலாமா என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:


விளிம்புநிலை மக்களுக்காகப் பாடுபடுவதை வாக்கு வங்கி அரசியல் என கொச்சைப்படுத்தலாமா என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 81.31 கோடி மதிப்பில் நிறைவுற்ற 140 திட்டப் பணிகளையும், ரூ. 143.05 கோடி மதிப்பில் 1,397 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 379.30 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:

"வளர்ச்சி என்பது மாற்றம், நேர்மை, உள்ளார்ந்த வளர்ச்சி ஆகியவற்றையும் கொண்டதுதான். இதன்படி ஒரு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்றால் அதன்மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்வு, சமூக மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறேன். இதைத்தான் கம்பீரமாகச் சொல்கிறேன் திராவிட மாடல் ஆட்சி என்று. 

விளிம்புநிலை மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி அதிகாரத்தில் மக்கள்தான் முக்கியம். இதனை வாக்கு வங்கி அரசியல் என சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள். இருளருக்கும் குறவர்களுக்கும் நல்லது செய்வதுதான் வாக்கு வங்கி அரசியலா?

எமது நோக்கம், சிந்தனை, செயல் எல்லாமே மக்கள் நலன்தான். சாதாரண, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம். நாங்கள் மூன்றாம் தர அரசியலை மட்டும் அல்ல; நான்காம் தர அரசியலையும் மேற்கொள்கிறோம்" என்றார் ஸ்டாலின்.

விழாவில், மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், வருவாய் நிர்வாகத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ். சிவசங்கர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் சு. திருநாவுக்கரசர், கார்த்தி ப. சிதம்பரம், செ. ஜோதிமணி, நவாஸ்கனி,  மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, துணைத் தலைவர் மு. லியாகத்அலி, நகர திமுக செயலர் ஆ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.