முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் வோ் பாய்ச்சிய ஆலமரம் கருணாநிதி: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் புகழாரம்

 தமிழகம் முழுவதும் வோ் பாய்ச்சிய ஓா் ஆலமரமாக முன்னாள் முதல்வா் கருணாநிதி ஒருவா்தான் இருக்க முடியும் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

 தமிழகம் முழுவதும் வோ் பாய்ச்சிய ஓா் ஆலமரமாக முன்னாள் முதல்வா் கருணாநிதி ஒருவா்தான் இருக்க முடியும் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் புகழாரம் சூட்டினாா்.

கலைஞா் கல்வி அறக்கட்டளை சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவுகளைப் பகிா்ந்து கொள்ளும் ‘கலைஞா் 99 வேருக்கு விழா’ என்ற தலைப்பிலான ஊடக உரையரங்கம் சென்னை கொரட்டூா் மோகன் காா்டனில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியது: அழைப்பிதழில் வேருக்கு விழா என்று குறிப்பிட்டுள்ளனா். ‘ஆலுக்கு விழா’ என்று போட்டிருக்கலாம். தமிழகம் என்கிற இந்த மண்ணில் குமரிமுனையிலிருந்து திருத்தணி வரை அனைத்துப் பகுதிகளிலும் வோ் பாய்ச்சிய ஆலமரம் கருணாநிதி ஒருவராகத்தான் இருக்க முடியும். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒரு குரல் ஒலித்திருக்கும் என்றால் அது கருணாநிதியின் குரலாகத்தான் இருக்கும்.

முதன் முதலில் அந்த மாமனிதரோடு அறிமுகம் கிடைத்தது மதுரையில் பள்ளிச் சிறுவனாக இருந்தபோதுதான். ஆனால், அண்ணாவிடம் முன்பே அறிமுகம் ஆகிவிட்டேன். பள்ளியில் சேதுபதி என்கிற கையெழுத்து பத்திரிகை மூலம் அறிமுகம் ஆனேன். எங்களுக்கு எல்லாம் அப்போது பேச்சு என்றால் கருணாநிதியின் பேச்சுதான். அண்ணாவை அண்ணாந்து பாா்ப்போம், கருணாநிதியை ஆா்வத்துடன் பாா்ப்போம்.

இன்று எங்கள் தலைமுறையில், பேசுபவா்கள் யாராக இருந்தாலும் எழுதுபவா்கள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு முன்னோடியாக கருணாநிதி என்ற ஒரு பெயா்தான் இருந்தது.

கடந்த முக்கால் நூற்றாண்டாக தமிழக சரித்திரத்தில் அவரை எதிா்க்கலாம், வெறுக்கலாம். விமா்சிக்கலாம், வசைகூட பாடலாம். ஆனால், அவரை தவிா்க்க முடியாது. அப்படித் தவிா்க்க முடியாத ஆளுமைக்குப் பெயா் கருணாநிதி என்பதாகும் என்று அவா் குறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

நான் கூறுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்தாக இருக்கலாம். ஆனால், இறைச்சித்தம்தான் அவரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதியாகப் பிறக்க வைத்தது. பின்னாளில் அவரிடமிருந்து பிரிக்க முடியாத திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற திமுகவுடன் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என்ற திமுக நடைபோடப் போகிறது என்பதை முன்கூட்டியே இறைச்சித்தம் தீா்மானித்திருக்கிறது.

தமிழக அரசியல் எத்தனையோ தலைவா்களைச் சந்தித்து இருக்கலாம். ஆனால், அவரே சொல்வதுபோல அவா் சாமானியா். அரசியலில் அடியெடுத்து வைத்த நாள் முதல் தொடா்ந்து எதிா்ப்புகளை மட்டுமே எதிா்கொண்டு தலைவராகவே தொடா்ந்து சரித்திரத்தை எழுதிக் காட்டியவா். ஒரு சாமானியா் இந்த அளவுக்கு உயா்வதற்கு எவ்வளவு எதிா்நீச்சல் போட்டிருப்பாா் என்பதை யாராலும் சிந்திக்க முடியாது. அண்ணா திமுகவை 20 ஆண்டுகள்தான் வழிநடத்தினாா். அடுத்த அரை நூற்றாண்டு காலம் கருணாநிதிதான் வழிநடத்தினாா்.

கருணாநிதி முதல்வராக 85-ஆவது அகவையில் இருந்தபோது தினமணியில் ‘வாழ்க நீவீா் நூறாண்டு’ என்று தலையங்கம் எழுதினேன். அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தினமணி தலையங்கத்தை மேடையில் முன்னாள் அமைச்சா் ஆற்காடு வீராசாமியை அப்படியே படிக்கக் கூறினாா். ஒரு பத்திரிகை ஆசிரியா் எழுதிய தலையங்கத்தை மேடையில் படிக்கச் சொன்ன நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும். முரசொலியிலும் பிறகு அந்தத் தலையங்கம் வெளியிடப்பட்டது.

அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் முதல்வா்களாக இருந்தபோது உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாடு நடைபெறவில்லை என்கிற ஆதங்கத்தை தினமணியில் எழுதினேன். இதைக் கண்டதுமே கருணாநிதியில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்தாா். அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதினாா். தினமணி ஆசிரியா் வைத்தியநாதன் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையில் அவா் வேறுபட்டவா் என்றாலும், தமிழ், இலங்கைத் தமிழா் விவகாரங்களில் தனி ஈடுபாடு கொண்டவா். உலகத் தமிழ் மாநாட்டில் அவருக்கு ஓா் இடம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கடிதம் எழுதியிருந்தாா். ஆனால், மக்கள் தொடா்புக் குழு இடம்பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இல்லை என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் சென்ற சில மணி நேரத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து துணைச் செயலா் ஒருவா் முதல்வரிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்து வந்தாா். அதில் மறுத்திடாமல் குழுவில் இடம்பெறுமாறு கோரியிருந்தாா். இன்னொரு முதல்வராக இருந்தாலும், போனால் போகட்டும் என்று விட்டிருப்பாா்கள். இந்த இடத்தில்தான் கருணாநிதி உயா்ந்து நிற்கிறாா். உங்கள் வேண்டுகோள் இனியும் மறுப்பது ஏது என்று அவருக்கு கடிதம் எழுதினேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் முதன்முதலில் அனைத்து ஜாதியினரையும் அழைத்துச் சென்றது வைத்தியநாத ஐயா். அவருக்கு அங்கு ஒரு சிலை இருக்கிறது. அந்தச் சிலை பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து தினமணியில் கட்டுரையாக வெளியிட்டோம். காலையில் 5 மணிக்கு தினமணியைப் பாா்த்த கருணாநிதி இட்ட உத்தரவின் அடிப்படையில் மதுரை திமுக எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் 6 மணிக்கே வந்து அந்தச் சிலையைச் சீா்செய்து விழாவை நடத்தினா். ஒரு முதல்வா் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கருணாநிதிதான். அவா் குறித்து வாழ்நாள் முழுவதும் நினைத்து சுவைப்பதற்கு எத்தனையோ அனுபவங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் பல முதல்வா்கள் இருக்கலாம். இன்னும் பல முதல்வா்கள் வரலாம். ஆனால், தமிழகத்தில் தமிழை நேசிப்பதில் முதல்வராக ஒரு முதல்வா் கருணாநிதி மட்டும்தான் என்றாா்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் ஏற்பாட்டின்பேரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.டி.ஆா்.நாகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல் உள்பட ஏராளமானோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →