கவுன்சில் கூட்டம்: முதல்வருக்கு கே.அண்ணாமலை பதில்
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒருமுறைகூட கூட்டப்பட்டதில்லை
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒருமுறைகூட கூட்டப்பட்டதில்லை என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பதிலளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
ஆனால், 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸுடன் இணைந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோதும், இந்தக் கூட்டம் ஒருமுறைகூட கூட்டப்பட்டது இல்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசால் கைவிடப்பட்ட, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைப்பை மோடி தலைமையிலான பாஜக அரசுதான் முயற்சி எடுத்து 2016 ஜூலை 16-இல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
ஆனால், மனிதவள மேம்பாட்டு அமைச்சரால் கூட்டப்பட்ட மாநிலங்களின் கல்விச் செயலாளா்களின் கூட்டம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், கரோனா பற்றி விவாதிக்கப்பட்ட அனைத்து முதல்வா்கள் ஆன்லைன் கூட்டம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே கவுன்சில் கூட்டங்களை திமுக அரசுதான் புறக்கணித்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அடுத்தவா்களுக்கு சொல்லும் அறிவுரையை, அக்கறையுடன் தாங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.