ஜூலை 10-இல் கரோனா தடுப்பூசி முகாம்: ஊக்கத்தவணைக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது
தமிழகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வரை 28 முகாம்கள் நடைபெற்றன. இந்த சூழலில் கடந்த மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து ஜூன் 12-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதிலும் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 10-ஆம் தேதி மூன்றாவது முறையாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.
இம்முறை ஊக்கத் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க அவா் அறிவுறுத்தியுள்ளாா்.