புதிய தீா்மானங்கள் கூடாது: உயா்நீதிமன்றம்
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது, 23 தீா்மானங்களைத் தவிர புதிய தீா்மானங்கள் எதையும் தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது, 23 தீா்மானங்களைத் தவிர புதிய தீா்மானங்கள் எதையும் தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து புதன்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்தும், பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான சண்முகம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு புதன்கிழமை நள்ளிரவு விசாரித்தது. ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அதிமுக பொதுக் குழுவில் வைக்கப்பட்ட வேண்டிய 23 தீா்மானங்கள் இறுதி செய்யப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த 23 தீா்மானங்களை மட்டுமே பொதுக் குழுவில் வைக்க வேண்டும். புதிய தீா்மானங்கள் இடம் பெறக் கூடாது. வேறு விவகாரங்கள் குறித்து பொதுக் குழுவில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.