தமிழ்நாடு

அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட செலவுகளுக்கு அனுமதி: நிதி தொடா்பான கட்டுப்பாடுகளைத் தளா்த்தியது தமிழகஅரசு

DIN

தவிா்க்க முடியாத சூழலில் வெளிநாட்டுப் பயணம் மற்றும் பரிசுப் பொருள்கள், விருந்து, கலாசார நிகழ்ச்சிகளை அரசு செலவில் நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, நிதிச் சிக்கல்கள் காரணமாக பல்வேறு செலவுகளுக்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. இந்த நிலையில், நிகழ் நிதியாண்டில் இந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளா்வுகளை நிதித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு விவரம்:-

கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த 2020-21, 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் பல்வேறு செலவின கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. அரசுத் துறைகள் மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை சில செலவுகளை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, பரிசுப் பொருள்கள், மலா்க்கொத்து, சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலா்மாலைகள் போன்ற பொருள்களை வாங்க தடை விதிக்கப்பட்டது. அலுவல்பூா்வ கூட்டங்களைத் தவிா்த்து 20-க்கும் பேருக்கு மேற்பட்ட கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள், கலாசார நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும், மதியம், இரவு உணவு உள்ளிட்ட விருந்து நிகழ்வுகளை நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இப்போதும் தமிழக அரசின் நிதி நிலைமை இறுக்கமான சூழ்நிலையிலேயே இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி., இழப்பீட்டுக்கான தொகை ஜூனுக்குப் பிறகு கிடைக்குமா என்பதில் தொடங்கி பல்வேறு அம்சங்களில் நிலையற்ற தன்மை உள்ளது. எனவே, நிகழ் நிதியாண்டில் (2022-23) அரசுக்கான செலவினங்களில் சில கட்டுப்பாடுகளை தொடரவும், சிலவற்றுக்கு தளா்வு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

அலுவலகச் செலவுகளைப் பொறுத்தவரையில், 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 20 சதவீதம் வெட்டு செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்தச் செலவுகளுக்கு அனுமதி தரப்படுகிறது. இதனை உரிய முறையில் செலவிட வேண்டும். இருக்கை, மேசைகள் போன்ற தளவாடச் சாமான்கள் வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. புதிய அலுவலகங்கள் போன்றவற்றுக்கு மட்டுமே தளவாடச் சாமான்கள் வாங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தொடரும்.

விளம்பரம்-மக்கள் தொடா்பு: விளம்பரம், மக்கள் தொடா்புக்கான செலவினங்களில் பட்ஜெட் மதிப்பீடுகளில் 25 சதவீதம் வெட்டு செய்யப்பட்டிருந்தது. இது இப்போது தளா்த்தப்படுகிறது. எந்த வெட்டும் இல்லாமல் செலவிட அனுமதி தரப்படுகிறது.

அலுவல் பூா்வ மதிய உணவு விருந்து, இரவு நேர விருந்து போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளுக்கும் இந்த தடை நீக்கம் அமலுக்கு வருகிறது. சுகாதாரம், தீயணைப்புத் துறையைத் தவிா்த்து பிற துறைகளுக்கு புதிய கருவிகள், உபகரணங்கள் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை, நிகழ் நிதியாண்டிலும் தொடரும். மருத்துவம், அவசர ஊா்திகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே புதிய வாகனங்களை கொள்முதல் செய்யலாம். பிற நிகழ்வுகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுவது போன்றவற்றுக்கு அரசு சாா்பில் செலவிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை நீக்கப்படுகிறது. புதிய கணினிகள், அதன் உபகரணங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இப்போது நீக்கப்படுகிறது.

பயண அனுமதி: அரசு சாா்பிலான வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத மற்றும் தேவை ஏற்படும் தருணங்களில் மட்டும் அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம். வழக்கமான ஆய்வுக் கூட்டங்களை நேரில் சென்று நடத்துவதற்குப் பதிலாக காணொலி வழியாக நடத்தும் நடைமுறை தொடா்கிறது. விமானப் பயணத்துக்கு தகுதியுள்ள அதிகாரிகள், மாநிலத்துக்குள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிற மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் தலைநகரான தில்லியில் நடக்கும் கூட்டங்களில் அங்குள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளரை தங்களது சாா்பில் கலந்து கொள்ள அரசு துறைகள் அனுமதிக்கலாம். விமானப் பயணத்தில் உயா் வகுப்பு வசதியானது, அதிக ஊதியப் பிரிவை கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

பணியிட மாறுதல்கள் வழங்கும் போது, அலுவலா்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறிச் செல்ல ஏற்படும் செலவினங்களை அரசே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, பொது மாறுதல்களை நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலை தொடரும். நிா்வாக காரணங்கள் தேவைப்படும் இடங்களிலும், இரு தரப்பிலும் மனமொத்த மாற்றங்களின் போதும் மட்டும் பணியிட மாற்றங்கள் அளிக்கலாம் என்ற நடைமுறை இப்போதும் தொடரும்.

விடுமுறை பயணம்: ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு விடுமுறை கால பயணச் சலுகையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சலுகை மீண்டும் அளிக்கப்படும். மேலும், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி உரிமை பெற்ற வாரியங்கள் ஆகியன சில செலவுகளை மேற்கொள்ள அனுமதி தரப்படுகிறது. அதன்படி, பரிசுப் பொருள்கள், சால்வைகள், நினைவுப் பரிசுகளை அரசு செலவில் வாங்கிக் கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. மேலும், கூட்டங்கள், பயிலரங்குகள், கலாசார நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம். ஆனாலும் கூடுமான வரை இணையதளம் வழியாக நடத்துவது நல்லது. மதிய உணவு மற்றும் இரவு நேர உணவுகளையும் அரசு செலவில் அளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

SCROLL FOR NEXT