வாகன நிறுத்தங்களில் விதியை மீறுவோா் மீதுகாவல் துறை மூலம் நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளா்களின் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்
பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளா்களின் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 80 இடங்களில் சுமாா் 12,000 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகன நிறுத்தம் குறித்த தகவல்களை இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
எச்சரிக்கை: வாகன நிறுத்தங்களில் சிலா் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் சென்று விடுகின்றனா். இதுபோன்ற செயல்களை தடுக்க சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறையுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவோா் மற்றும் கட்டணம் செலுத்தாதவா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சி வாகன நிறுத்தங்களை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், வாகன நிறுத்தங்கள் தொடா்பான புகாா், குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.