உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தென்னிந்திய பிரபல பன்மொழி நடிகையான மீனா, தமிழ் சினிமாவில் நடித்திருப்பதோடு மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரை அனைத்து மொழியினரும் தங்களுக்குப் பிடித்த நடிகையாக அங்கீகரித்திருந்தனர்.
2009- ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை நடிகை மீனா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு உறுப்பு தானம் வழங்குபவர்கள் கிடைக்காததால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் வித்யாசாகர் கரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் நுரையீரல் பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். உயா் சிகிச்சைக்காக மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருமணத்திற்கு பிறகும் நடிகை மீனா தொடர்ந்து நடித்து வந்தார். 2021-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கடந்த ஆண்டு தனது திருமண நாளில், திருமண வரவேற்பு புகைப்படத்தைப் பகிர்ந்த மீனா, “என் வாழ்வில் வானவில் போல வந்து அழகாக ஓவியம் வரைந்தீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.