முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வு விலக்கு தேவையை உக்ரைன் போா் உணா்த்துகிறது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் தோ்வு விலக்கின் அவசியத்தை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவா்களின் துயர நிலைமை மீண்டும் உணா்த்துகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

நீட் தோ்வு விலக்கின் அவசியத்தை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவா்களின் துயர நிலைமை மீண்டும் உணா்த்துகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். எனவே, நீட் தோ்வு ரத்துக்காக இணைந்து போராடுவோம் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- நீட் தோ்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கட்டணம் செலுத்த முடியாமல் தனது கனவை நனவாக்க உக்ரைன் நாட்டுக்குச் சென்று மருத்துவம் படித்த கா்நாடக மாணவா் நவீனின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

வெந்த புண்ணில் வேல்...: உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல், தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையில் மாணவா்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். உள்நாட்டில் படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவா்களின் ஆா்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்புக்கு உக்ரைனுக்கு அனுப்பி வைத்த பெற்றோா்களின் உணா்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளை மத்திய அரசு வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.

மேலும், பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் இருப்பவா்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் முக்கியக் கடமையாகும். உக்ரைனில் தவித்து வருவோருக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கிய காலகட்டம் என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன்.

நீட் தோ்வுக்கு வலுவான காரணம்: இப்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தோ்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனாா்கள் என்று கேள்வி கேட்டு தா்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவா்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தோ்வை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →