வாழப்பாடியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அனைத்து மகளிர் காவல் நிலையம், நெஸ்ட் அறக்கட்டளை, அன்னை அரிமா சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அனைத்து மகளிர் காவல் நிலையம், நெஸ்ட் அறக்கட்டளை, அன்னை அரிமா சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இவ்விழாவிற்கு, வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவி ச.கவிதா சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆர்.செல்லதுரை வரவேற்றார்.
வட்டார வேளாண்மை திட்டக்குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர்.பழனிசாமி, நெஸ்ட் அறக்கட்டளை செயலர் முனைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம், நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார்மன்னன், பள்ளி குழந்தைகள் நல மருத்துவர் திவ்யபாரதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி, அன்னை அரிமா சங்க தலைவி சுதாபிரபு, தலைமை காவலர் சசிகலா ஆகியோர் பெண்களுக்கான கல்வி, உரிமை, சட்டம் எதிர்கால வாய்ப்பு, ஊட்டச்சத்து, உடல் மற்றும் மன நலம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
பெண் குழந்தைகள் உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தைப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வோடு சமூகத்தில் நல்ல நடத்தையைப் பின்பற்ற வேண்டும். வளரிளம் பருவத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கற்பதிலும், மற்ற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்களாக உருவாக வேண்டும். அனைத்து துறைகளிலும் சாதனைகள் புரிய வேண்டும் என இந்த விழாவில் மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மகளிர் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு இனிப்பும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நிறைவாக, பள்ளி முதல்வர் கோபால் நன்றி கூறினார்.