முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.500 கோடியில் புதிய தொழில் பிரிவுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 200 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய தொழில் பிரிவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 200 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரூ.500 கோடி மதிப்பிலான புதிய தொழில் பிரிவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட்-கோபைன் என்ற புகழ்பெற்ற கண்ணாடி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2000-ஆம் ஆண்டில் கண்ணாடி உற்பத்தி தொடங்கப்பட்டது. 177 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் நிறுவனம் ரூ.3,750 கோடியை முதலீடு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனமானது, சுமாா் ரூ.4,700 கோடி முதலீட்டைச் செய்து நேரடியாக 2,000 பேருக்கும், மறைமுகமாக 2, 500 பேருக்கும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

ரூ.500 கோடி முதலீடு: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் வளாகத்தில் கண்ணாடி, முகம் பாா்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான பல்வேறு வகை கண்ணாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட 90 சதவீத கண்ணாடிகள் இந்த வளாகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இப்போது ரூ.500 கோடி முதலீட்டில் புதிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். அதில் மிதவை கண்ணாடிப் பிரிவு முக்கியமானது. அதிகபட்ச உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், பிரத்யேக வடிவமைப்பு ஆகிய சிறப்புத் தன்மைகளை உள்ளடக்கியது. நவீன கட்டமைப்புகளுக்கு ஏற்ற கண்ணாடிகள், ஆட்டோமொபைல் துறைக்கேற்ற கண்ணாடிகள், சூரிய மின் உற்பத்திக்கான கண்ணாடிகளை இந்தப் பிரிவு தயாரிக்கிறது.

ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10,000 சதுரமீட்டா் பரப்பில் ஆண்டுக்கு 1 லட்சம் ஜன்னல்களை ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்தப் பிரிவு இருக்கும்.

3 லட்சம் சதுரடி பரப்பில் 60,000 மரங்கள் கொண்ட நகா்ப்புற வனமானது, செயின்ட்-கோபைன் சிப்காட் நகா்ப்புற வனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டமானது அரசின் பசுமை இலக்கை எட்டவும், மாநிலத்தின் பசுமைப் பகுதி அளவை அதிகரிக்கவும் உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா், டி.ஆா்.பாலு, சட்டப் பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →