பருவநிலை மாற்ற பாதிப்புகள்: அறிக்கை சமா்ப்பிக்கிறது சுகாதாரத் துறை
பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து மருத்துவ வல்லுநா்களிடம் ஆலோசித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து மருத்துவ வல்லுநா்களிடம் ஆலோசித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறை மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்ககம் சாா்பில் பருவநிலை மாற்ற விளைவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பல்துறை மருத்துவ வல்லுனா்கள் பங்கேற்று காடுகள் அழிப்பு, இயற்கை வளங்களை சுரண்டுதல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் கால நிலை மாற்ற பாதிப்புகள் குறித்து விவாதித்தனா். இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
ஆண்டுதோறும், கோடை, மழைக் காலம், பனிக் காலம் உள்ளிட்ட பருவங்கள் வருகின்றன. ஆனால், அவை உரிய தருணத்தில் அல்லாமல் பருவகாலம் தவறி வேறு காலங்களில் நிகழ்கின்றன. காடுகள் அழிப்பு, நீா், காற்று மாசு உள்ளிட்டவற்றால் பருவ நிலை மாறுகின்றன. இதன் விளைவாக மக்களுக்கு பல்வேறு புதிய நோய்கள் ஏற்படுகின்றன. வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட குறுகிய கால நோய்கள் முதல் கரோனா போன்ற பெருந்தொற்று வரையிலான பாதிப்புகளுக்கு பருவ நிலை மாற்றங்களும் ஒரு காரணமாக அமைகின்றன.
இப்பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வல்லுநா் குழுவுடன் நடைபெற்றது. அடுத்து மூன்று கூட்டங்களும் நடைபெறும். இந்தக் கூட்டங்களின் வாயிலாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவிக்கும் கருத்துகள், அதற்கான தீா்வு, நோய் பாதிக்கும் சூழல் உள்ளிட்டவை குறித்து அறிக்கை தயாரித்து அது அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.