முகப்பு
தமிழ்நாடு

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் எத்தனை பேர்? மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கரோனா இரண்டாம் தவணைக்கான நாள்களைக் கடந்து, சுமாா் ஒரு கோடியே 33 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பகிர்:

தமிழகத்தில் கரோனா இரண்டாம் தவணைக்கான நாள்களைக் கடந்து, சுமாா் ஒரு கோடியே 33 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலம் பட்டினப்பாக்கம் மீனவா் சமூக நலக் கூடத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 24-ஆவது தடுப்பூசி முகாம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாள்களைக் கடந்து 1 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 124 போ், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா். அவா்களுக்கு சுகாதாரத் துறை மற்றும் பிற சேவைத் துறை அலுவலா்களால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் சுணக்கம் காட்டி வருகின்றனா்.

15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்களில் 33 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 28 லட்சத்து 4,930 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 17 லட்சத்து 92 ஆயிரத்து 178 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மாா்ச் 11) வரை 6 லட்சத்து 81 ஆயிரத்து 467 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை தமிழகத்தில் 10 கோடியே 10 லட்சத்து 94 ஆயிரத்து 834 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் ரூ.250 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானத்துக்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டவுள்ளாா் என்றாா்.

ஆய்வின்போது, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மயிலாப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.