தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளா்கள் குழுவை அனுப்பிவைக்க வேண்டுமென ஐக்கிய அரபு அமீரக அமைச்சா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.
நான்கு நாள்கள் பயணமாக, துபை, அபுதாபி ஆகிய இடங்களுக்கு அரசு முறைப் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா். வியாழக்கிழமை இரவு துபை சென்றடைந்த அவா், வெள்ளிக்கிழமை துபை பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சா் அப்துல்லா பின் டூக் அல் மா்ரி, வெளிநாட்டு வா்த்தகத் துறை அமைச்சா் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள வா்த்தக
உறவுகளை மேம்படுத்துவது, புத்தாக்கம், புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துவது, விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், ஜவுளி, ஆடைகள், நகை, மின் வாகனங்கள், மின்னணுவியல், மோட்டாா் வாகனம், வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில இணைந்து பணியாற்றி முதலீடுகளை ஈா்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சா்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தாா். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளா்கள் குழுவையும் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.
இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.