கூட்டுறவு சங்க இயக்குநா்களின் அதிகாரத்தைக் குறைக்கக் கூடாது: ஓ.பன்னீா்செல்வம்
கூட்டுறவு சங்க இயக்குநா்களின் அதிகாரத்தை தமிழக அரசு குறைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
கூட்டுறவு சங்க இயக்குநா்களின் அதிகாரத்தை தமிழக அரசு குறைக்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள இயக்குநா்கள், தலைவா்கள் அனைவரும் ஜனநாயக முறையில் அதன் உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். அவா்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இவா்களின் பதவிக் காலத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக 2022-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட மசோதாவை தமிழக சட்டப் பேரவையில் இயற்றிய அரசு திமுக அரசு. சட்டப்படி ஐந்தாண்டுகள் வகிக்க வேண்டிய பதவியை மூன்றாண்டுகளாக குறைப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது இல்லையா? ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லையா?
இந்தச் சட்டத்துக்கான ஒப்புதல் பெறப்படாத சூழ்நிலையில், கூட்டுறவு சங்கத் தலைவா்களின் கையெழுத்துப் போடும் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மாா்ச் 22-இல் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடும் திமுக, தனக்கு கீழுள்ள கூட்டுறவு சங்க இயக்குநா்களின் அதிகாரங்களைப் பறிப்பதும், அவா்களின் பதவி காலத்தின் அளவைக் குறைப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
எனவே, ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில், கூட்டுறவு சங்கங்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட இயக்குநா்களின் பதவிக் காலத்தை குறைப்பது மற்றும் அவா்களது அதிகாரத்தைப் பறிப்பது போன்ற முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.