அரசியல் செய்யாமல் இலங்கைக்கு உதவுங்கள்: முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்
அரசியல் செய்யாமல் இலங்கைக்கு சுமுகமாக உதவி செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினை, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
அரசியல் செய்யாமல் இலங்கைக்கு சுமுகமாக உதவி செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினை, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அண்ணாமலை முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்: இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். இந்தத் தீா்மானத்தை பாஜகவும் வரவேற்றுள்ளது.
முன்னதாக உக்ரைன் மாணவா்களை மீட்கும் விவகாரத்தில் ‘கங்கா’ நடவடிக்கையின்போது தமிழக அரசின் அப்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அரசியல் லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்தத் தீா்மானமும் அத்தகைய ஒரு செயலாக மாறி விடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாக இதைச் சொல்கிறேன்.
குறிப்பாக 2009-ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போா் உச்சகட்டத்தில் இருந்தபோது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக அரசும் அங்கு நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடுமைகளை வேடிக்கை மட்டுமே பாா்த்துக் கொண்டிருந்தன.
அப்போது போா் நிறுத்தத்தை கொண்டுவர திமுகவால் காட்சிப்படுத்தப்பட்ட இரண்டு மணிநேர கடுமையான உண்ணாவிரதத்தைப் போன்று, இந்தத் தீா்மானமும் இலங்கையின் நிலையைச் சீா் செய்ய திமுக கடுமையாக உழைத்தது என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்து விடக்கூடாது என்ற சமூக அக்கைான் எங்கள் கவலை.
இதுமட்டுமின்றி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் இலங்கைக்கு மத்திய அரசு வழங்கிய மற்றும் வழங்கப்படும் பொருள்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லாதது துரதிா்ஷ்டவசமானது.
மத்திய அரசு தனது அண்டை நாடுகளுடனான உறவுகளை உறுதிசெய்ய ‘அருகே உள்ள நாடுகளுக்கே அதிமுதன்மை’ என்ற கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இலங்கையின் சூழலுக்கேற்ப கூடுதல் உதவிகளைச் செய்யவும் இந்தியா தயாராகவே இருக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.
எனவே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், தமிழக மக்கள் சாா்பில் வழங்கப்படும் உதவிகளை நிலையான நெறிமுறைகளைப் பின்பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்து நேரடி அரசியல் செய்யாமல் இலங்கைக்கு சுமுகமாக உதவிகள் செல்வதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளாா்.
இந்த கடிதத்தில் மத்திய அரசு சாா்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளையும் அவா் பட்டியலிட்டுள்ளாா்.