100 நாள்கள் வேலை திட்டத்தில் பனை மரங்களை நடக் கோரி வழக்கு
நூறு நாள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நடுவதற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
நூறு நாள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நடுவதற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சோ்ந்த அய்யா என்பவா் தொடுத்த பொதுநல வழக்கு தொடா்பான மனுவில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்காக, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு, நூறு நாள் வேலை வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூா்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிராம மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் முருங்கை மரங்களையும், பனை மரங்களையும் நட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. முருங்கை மரமும், பனை மரமும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. மனித குலத்துக்கு ஆரோக்கியமானது. எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலித்து, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் இந்த 2 மரங்களையும் நட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளாா். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.