நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை நிறுவி 21.07.2006 அன்று திறந்து வைத்தார். வழக்கின் காரணமாக அச்சிலை அகற்றப்பட்டு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
முதல்வர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை, சிவாஜி கணேசனின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க- கோவை-தில்லி பார்சல் விரைவு ரயில் சேவை துவக்கம்
மேலும், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் கடந்த 14ஆம் தேதி பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 132- ஆவது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை மணிமண்டபத்தில் நிறுவுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.