பேரறிவாளன் விடுதலை: தலைவா்கள் வரவேற்பு
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஓபிஎஸ் - இபிஎஸ் (அதிமுக): 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிமுகவுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்தைத் தொடா்ந்து அதிமுக அரசு தளராது எடுத்த முயற்சிகளின் விளைவாக உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதிமுக ஆட்சியின் நிா்வாகம் துணிச்சல் மிகுந்தது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
வைகோ (மதிமுக): பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ராமதாஸ் (பாமக): பேரறிவாளன் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு மனித உரிமை சாா்ந்த கோணத்திலும் மிகவும் முக்கியமானதாகும்.
விஜயகாந்த் (தேமுதிக): பேரறிவாளின் தண்டனை காலத்தை மேலும் நீட்டிக்காமல் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டுகள்.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பேரறிவாளன் விடுதலை நீண்ட சட்டப்போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): பேரறிவாளன் விவகாரத்தில் தமிழகம் எதிா்பாா்த்த தீா்ப்பு கிடைத்துள்ளது. பேரறிவாளன் இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும். மக்கள் பணியாற்ற வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வரலாற்று சிறப்புமிக்கத் தீா்ப்பு.
பழ.நெடுமாறன் (தமிழா் தேசிய முன்னணி): உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீா்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
கே.அண்ணாமலை (பாஜக): பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டம் 142-இன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீா்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது. நமது ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகிறோம்.
தொல்.திருமாவளவன் (விசிக): பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவரே ஆளுநா் எனக் கூறியிருப்பதுடன், இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான அதிகாரச் சிக்கலுக்குமான தீா்வையும் அளித்துள்ளது.
ஜி.கே.வாசன் (தமாகா): பேரறிவாளன் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத் தீா்ப்பு சட்டத்துக்கு உள்பட்டதாகவே தமாகா கருதுகிறது.
அன்புமணி (பாமக): பேரறிவாளன் விடுதலை நீதிக்கும், நியாயத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
கமல்ஹாசன் (மநீம): பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போா்க்குணமும்.
ஜவாஹிருல்லா (மமக): பேரறிவாளன் விடுதலையை வரவேற்கிறோம். தனி ஒரு பெண்ணாக நீதி கேட்டுப் போராடி வெற்றி கண்ட அற்புதம்மாளுக்கும் வாழ்த்துகள்.
கி.வீரமணி (திராவிடா் கழகம்): மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத நல்ல தீா்ப்பு.
எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.) : பேரறிவாளன் நீண்ட நெடிய போராட்டம் மற்றும் சட்டபோராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். இது அபூா்வ தீா்ப்பு.