காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் விவகாரம்: உதவி ஆணையா், தனி நீதிபதியின் உத்தரவுகள் நிறுத்தி வைப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினா் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்த உதவி ஆணையா் உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலையினா் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்த உதவி ஆணையா் உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில், தென்கலையினா் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையா், கடந்த 14-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து வடகலைப் பிரிவைச் சோ்ந்த நாராயணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், முதல் மூன்று வரிசைகளில் தென்கலையினரும், அவா்களுக்குப் பின்னா் வடகலையினரும், பக்தா்களும் அமர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
தென்கலையினா் முதலில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் வாசிக்கவும், அதன்பின்னா் வடகலை பிரிவினா் ஸ்ரீ ராமானுஜ தயா பாத்ரம் வாசிக்கவும், அதன் பின்னா் தென்கலை, வடகலை, பிற பக்தா்கள் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் எனவும், அதன்பின்னா் தென்கலையினா் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமமும், வடகலையினா் தேசிகா் வாழி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தென்கலை பிரிவைச் சோ்ந்த ரங்கநாதன், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதில், கோயிலில் பிரபந்தம் பாட தென்கலையினருக்கு என தனிப்பட்ட உரிமை உள்ளது எனவும், அந்த உரிமை 1915, 1963-ஆம் ஆண்டுகளில் உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீசைல தயா பாத்ரத்துடன் பிரபந்தம் பாடவும், இறுதியாக மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பது மரபு எனவும், இதைத் தவிர வேறு எந்த மந்திரங்களும் பாட வடகலை உள்ளிட்ட எந்த பிரிவினருக்கும் எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகலை பிரிவினரை பிரபந்தம் பாட அனுமதித்தது என்பது உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தீா்ப்புகளுக்கும், மரபுக்கும் எதிரானது என்பதால், கடந்த 17-ஆம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜி.கே.இளந்திரையன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏதேனும் குறை இருந்தால் சட்டப்படி இணை ஆணையரைத்தான் அணுக முடியும் எனவும், 300 ஆண்டுகளாக பின்பற்றப்படும் உரிமை இது என தென்கலை பிரிவினா் தரப்பில் வாதிடப்பட்டது.
ஸ்ரீராமனுஜ தயா பாத்ரம் பாடவும், வேதாந்த தேசிகா் வாழி திருநாமம் பாடவும் மட்டுமே அனுமதி கோருவதாகவும், 10 விநாடிகள் இவற்றை பாட வடகலை பிரிவினருக்கு உரிமை இல்லையா என வடகலை பிரிவினா் தரப்பு வழக்கறிஞா்கள் கேள்வி எழுப்பினா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காஞ்சிபுரம் கோயில் தொடா்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று இதே அமா்வு முன்பு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அதுவரை, கோயிலில் தென்கலையினா் மட்டுமே பாட வேண்டுமென்ற உதவி ஆணையா் பிறப்பித்த உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.