அரசு பேருந்தை மறித்து டிக்டாக் விடியோ: 3 மாணவா்களுக்கு தண்டனையாக போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி
சென்னையில் அரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக் விடியோ எடுத்த 3 மாணவா்களைப் பிடித்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தினா்.
சென்னையில் அரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக் விடியோ எடுத்த 3 மாணவா்களைப் பிடித்த போலீஸாா், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தினா்.
சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூா் நோக்கி செவ்வாய்க்கிழமை அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. புது வண்ணாரப்பேட்டை செரியன் நகா் சந்திப்பில் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த 3 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தினா். அப்போது, அவா்கள், தங்களது கைப்பேசி மூலம் டிக்டாக் விடியோ எடுத்தனா். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், இந்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இதைப் பாா்த்த காவல் துறை உயரதிகாரிகள், விசாரணை நடத்த உத்தரவிட்டனா். அதன்பேரில், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில் அந்த விடியோ எடுத்து வெளியிட்டது புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இரு கல்லூரி மாணவா்கள், ஒரு பள்ளி மாணவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை பிடித்தனா்.
இதையடுத்து அரசுப் பேருந்தை வழிமறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக அவா்கள் 3 பேரும் 3 நாள்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.
அதன் அடிப்படையில் 3 பேரும், வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். காவல் துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.