கடத்தி, கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு: விஷமருந்திய சிறுமி மரணம்!
பெரம்பலூர் அருகே கடத்தி கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி விஷயமருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சேலம்: பெரம்பலூர் அருகே கடத்தி கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி விஷயமருந்திய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் 17 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் மணிகண்டன் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர் ஒருவர் மீண்டும் மிரட்டியதாக காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் மணிகண்டனின் தந்தை, அவரது உறவினர் இருவரையும் கைகளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே மனமுடைந்த சிறுமி கடந்த 3-ம் ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சேலம் அரசு மருத்துவமனை முன்பு சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறும்போது, 'எனது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார் இதனால் மனவேதனை அடைந்த எனது மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். எனவே, இறந்த என் மகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் இறந்த மகளின் உடலை வாங்க மாட்டோம்' என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.