தமிழ்நாடு

அனைவருக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான்

DIN


ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.24) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: 

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் வளர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 

அரசின் பயனானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படிதான் திட்டமிடுகிறோம். செயல்படுத்துகிறோம். அரசின் கவனம் மிகுதியாகத் தேவைப்படுவோரில் குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யவும் 2011-ஆம் ஆண்டு கருணாநிதி தனித்துறையாக உருவாக்கினார். மாற்றுத்திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். அத்தகைய கவனத்தோடு இத்துறையை நானும் எனது தனி கவனிப்பில் வைத்திருக்கிறேன்.

நமது அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1000 இல் இருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 2000 வழங்கப்படுகிறது. இதனால், 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தொழில் தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக் கல்வி தகுதியினை எட்டாம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும், வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி சிறப்புநிதி ஒதுக்கீடு செய்தும் நமது அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 

வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல் வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புப்பள்ளிகள் மற்றும் ஆரம்பநிலைப் பயிற்சி மையங்களில் பணியாற்றும் ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் ஒரு அலுவலகம் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதற்காகத் தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

திருமண நிதியுதவியானது இனிமேல் முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மற்றும் ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையாகவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது. எனவேதான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய்தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற்காக தரைத் தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

செவித்திறன் குறைபாடு உடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“18 வயதிற்கு உள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய” அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ஆயிரத்து ரூ.763 கோடியே 19 லட்சம் செலவில் தொடங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து இதர அரசுத் துறைகளின் மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.

 “சமூகப் பதிவு அமைப்பு” மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப்பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும்.

இப்படி ஏராளமான திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் காவலரான கருணாநிதி வழியில், நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கிறது. இத்திட்டங்களை எல்லாம் எவ்வாறு மேலும் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்ற ஆலோசனையை அனைவரும் வழங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

அவசியத் தேவைகள் குறித்தும் ஆலோசனைகளை இங்கே சொல்லுங்கள். செய்ய இயன்ற ஆலோசனைகளைச் சொல்லுங்கள். ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடைந்து விடக்கூடாது. ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் என்றாலும் அந்தச் செயலை நாம் செய்தாக வேண்டும். இத்தகைய கருணை உள்ளத்தோடு இவர்களது நலம் காக்க பாடுபட நாம் என்றைக்கும் துணையாக நிற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT