சேலம் - உளுந்தூா்பேட்டை புறவழிச்சாலைகள் விரிவாக்கம்: அன்புமணி வரவேற்பு
சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி
சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பாமக சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச்சாலைகளில் முதல் கட்டமாக 6 புறவழிச்சாலைகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள்ளாகவும், மீதமுள்ள இரு புறவழிச்சாலைகள் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாகவும் 4 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்திருக்கிறாா். இந்தத் திட்டங்களை வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.
சேலம்-உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ நீள சாலை கிட்டத்தட்ட மரணப்பாதை என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறும் சாலையாக இருந்தது. அதனால் புறவழிச்சாலைகளை நான்கு வழிப் பாதையாக மாற்ற அன்புமணி தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். தற்போது இந்த திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது அன்புமணியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று அதில் கூறப்பட்டுள்ளது.