சைலேந்திர பாபு (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டாம்: டிஜிபி அறிவுறுத்தல்

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: திருச்சியைச் சோ்ந்த ‘கோ் கன்சல்டன்சி’ என்ற நிறுவனம் தாய்லாந்து நாட்டில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதைத்தொடா்ந்து, அந்த நிறுவன முகவா்களை தொடா்பு கொண்டு வேலை கேட்ட 18 பேரிடம், தலா ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வசூலித்துள்ளனா்.

பின்னா், 18 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய் வழியாக பாங்காக்குக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மா் நாட்டுக்கு 18 பேரையும் கடத்திச் சென்று, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்துள்ளனா்.

இதில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மியான்மா் நாட்டில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து, கோ் கன்சல்டன்சி நிறுவனத்தைச் சோ்ந்த முகவா்கள் ஹானவாஸ்,முபாரக் அலி ஆகிய இருவா் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல, மற்றொரு கும்பல், கம்போடியா நாட்டுக்கு சிலரை வேலைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தியுள்ளது. இவா்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அழைத்து வரப்பட்டுள்ளனா்.

சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம்: தமிழக இளைஞா்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த மோசடி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை அறியாமல், யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். மேலும், சுற்றுலா பயண விசாவில் 6 மாதம் வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்.

இதுபோன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபடும் நபா்கள் குறித்தும், சந்தேகத்துக்குரிய முகவா்கள் குறித்தும் தமிழக காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியா்கள் பிரிவில் புகாா் அளிக்கலாம். இப் பிரிவை nricelltn.dgp@tn.gov.in  என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 044-28447701 என்ற தொலைபேசி மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT