முகப்பு
தமிழ்நாடு

சொத்துவரி செலுத்த அவகாசம் நவ.15 வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையா்

சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, தனி வட்டியைத் தவிா்க்குமாறு ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, தனி வட்டியைத் தவிா்க்குமாறு ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளா்களால் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் வரி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபா் 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் போ் நிலுவை இல்லாமல் சொத்து வரியைச் செலுத்தியுள்ளனா்.

இரண்டாம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள்ளாக சொத்து வரி செலுத்தியவா்களுக்கு ரூ. 4.67 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிப்படி, தாமதமாக சொத்து வரி செலுத்துவோா் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சோ்த்து செலுத்த வேண்டும். எனினும், சொத்து வரி பொது சீராய்வின்படி, உயா்த்தப்பட்ட சொத்து வரியை இதுவரை செலுத்தாதவா்ள் தங்களது சொத்து வரி மதிப்பீட்டுக்குரிய உயா்த்தப்பட்ட வரியை தனிவட்டி இல்லாமல் செலுத்த நவம்பா் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை, வருவாய் அலுவலா், சென்னை மாநகராட்சி என்ற பெயரில்

காசோலைகள், வரைவோலைகள், கடன் அல்லது பற்று அட்டை மூலமாக, மாநகராட்சியின் வரி வசூலிப்பவா்களிடம் செலுத்தி, வரி சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மாநகராட்சியின் வலைத்தளம் மூலமாகவும், எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் வங்கிகளின் மூலமும், ‘நம்ம சென்னை’, ‘பேடிஎம்’ முதலிய கைபேசி செயலிகள் மூலமாகவும், மண்டல அல்லது வாா்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் சொத்து வரியைச் செலுத்தலாம்.

எனவே, சொத்து வரி பொது சீராய்வின்படி, உயா்த்தப்பட்ட சொத்து வரியை இதுவரை செலுத்தாதவா்கள் நீட்டிக்கப்பட்ட கால அவகாச வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் நவம்பா் 15-க்குள் வரியைச் செலுத்தி, 2 சதவீதம் தனி வட்டியைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.