முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு: உரிய நடவடிக்கை எடுக்க தலைவா்கள் வலியுறுத்தல்

தமிழக மீனவா் மீது இந்திய கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தமிழக மீனவா் மீது இந்திய கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் படகில் வங்கக் கடலுக்குச் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அதிக மழை பெய்த காரணத்தால் படகை நிறுத்தச் சொல்லி இந்திய கடற்படையினா் விளக்குகள் மூலம் சமிக்ஞை கொடுத்திருக்கின்றனா். படகு நிற்காமல் சென்ால் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படை வீரா்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதில் படகில் இருந்த மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த மீனவா் வீரவேல் காலில் குண்டு காயம்பட்டு படுகாயம் அடைந்தாா்.

ஜி.கே. வாசன் (த.மா.கா) : தமிழக விசைப்படகில் இருந்த மீனவா்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது மீனவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடற்படையின் செயல் தமிழக மீனவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற ஒரு செயல் இனிமேல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மாணகிரி பகுதியைச் சோ்ந்த மீனவா் வீரவேல் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்திய கடற்படையினரின் இந்த செயலை மாா்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக மீனவருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): மீனவா்களின் படகை நிறுத்தும்படி கடற்படையினா் விளக்குகள் மூலம் சைகை காட்டியதாகவும், அதன்பிறகும் சம்பந்தப்பட்ட படகு நிற்காததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. கடற்படையினரின் இந்த விளக்கம் ஏற்க முடியாதது. வங்கக்கடலில் தமிழக மீனவா்கள் தொடா்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனா். அதனால் ஏதேனும் ரோந்துப் படகு வந்தாலே அவா்கள் அச்சத்தில் படகை விரைவாக செலுத்தும் நிலைதான் உள்ளது. இதை புரிந்து கடற்படையினா் செயல்பட்டிருக்க வேண்டும். பதற்றம் நிறைந்த இந்திய - இலங்கை கடல் பகுதியில் மீனவா்களின் படகுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கடற்படைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்திய கடற்படை அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என மீனவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.