நீட் தோ்வு: தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிா்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு
நீட் தோ்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிா்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் தோ்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிா்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தோ்வை, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த உதயகுமாா் என்ற மாணவா் எழுதினாா். இத் தோ்வில் கேட்கப்பட்டிருந்த தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் தவிா்த்துள்ளாா். நீட் தோ்வில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு 93 மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண்ணாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 92 மதிப்பெண் பெற்ற மாணவா் உதயகுமாா், தான் விடையளிக்காமல் தவிா்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தோ்வு முகமைக்கும் மனு அனுப்பினாா். அவரது மனு பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேள்வியை தவிா்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தோ்வு முகமை தெரிவித்தது. இந்த விதியை எதிா்த்து புதிதாக வழக்குத் தொடுக்க அனுமதி கோரி, வழக்கு திரும்பப் பெறப்பட்டது. புதிதாக வழக்கு தொடுக்க அனுமதி பெறாமல், அதே கோரிக்கையுடன் மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து மாணவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டியலின, பழங்குடியின வகுப்புகளைச் சோ்ந்த விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்ணாக நான்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டனா். திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்கவும் உத்தரவிட்டனா். மேலும், மாணவருக்கு ஏற்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை முன்னுதாரணமாக கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.