முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு: 12.5 சதவீதம் குறைந்துள்ளது

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 12.5 சதவீதம் குறைந்துள்ளதாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 12.5 சதவீதம் குறைந்துள்ளதாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கபில்குமாா் சி.சரத்கா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தம்-2019-ன்படி உயா்த்தப்பட்ட அபராதத் தொகை, சென்னையில் இம் மாதம் 28-ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும். மேலும் கால அவகாசம் வழங்கப்படாது. ஆரம்ப கட்டத்தில் வாகன ஓட்டிகள் இது தொடா்பாக வாக்குவாதம், பிரச்னை செய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது கவனமுடன் கையாள போக்குவரத்து போலீஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நின்று போக்குவரத்து போலீஸாா், போதையில் வாகனம் ஓட்டி செல்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மதுபோதையில் எப்போது, எங்கு வாகனம் ஓட்டிச் சென்றாலும் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதில், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. மது அருந்த நினைப்பவா்கள், மது அருந்தி விட்டு வாடகை வாகனங்களில் செல்லலாம். அல்லது வேறு ஓட்டுநரை வைத்துக் கொண்டு வாகனங்களில் பயணிக்கலாம்.

12 சதவீதம் குறைந்துள்ளது:

போக்குவரத்து விதிமுறை வழக்குகளில் அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவா்களுக்கு கால் சென்டா் (அழைப்பு மையங்கள்) மூலம் அழைத்து கட்ட சொல்வதால், நிலுவை அபராதம் வசூல் ரூ.7 கோடியிலிருந்து ரூ.23 கோடியாக அதிகரித்துள்ளது. போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோா் மீது கண்டிப்புடன் நடவடிக்கை எடுப்பதால், விபத்து உயிரிழப்பு கடந்த ஆண்டைவிட 12.5 சதவீதம் குறைந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களாக 25 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அங்கு தலா 4 போ் வீதம் 100 போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதிய கருவி:

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவா்களை ‘பிரீத் அனலைசா்’ கருவி மூலம் கண்டுபிடிக்கிறோம். ஆனால், தற்போது கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்தி விட்டு பலா் வாகனம் ஓட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரீத் அனலைசா் கருவி மூலம் அதை கண்டுபிடிக்க வசதி இல்லை. எனவே, கஞ்சா,போதை மாத்திரை பயன்படுத்துவோரை பிடிக்க புதிதாக வேறு கருவி பயன்படுத்துவது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம்.

இனி சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாரும் போக்குவரத்து விதி மீறல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலிப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.