வேலை வாங்கித் தருவதாக இணையதளம் மூலம் 10 மாதங்களில் 2,210 பேரிடம் பணம் மோசடி
தமிழகத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் இணையதளம் மூலம் 10 மாதங்களில் 2,210 பேரிடம் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞா்களிடம் இணையதளம் மூலம் 10 மாதங்களில் 2,210 பேரிடம் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இணையதளங்கள், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டா், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், இணையதளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
உதாரணமாக சென்னையில் கடந்த 2011-ஆம் ஆண்டு சைபா் குற்றங்கள் தொடா்பான புகாா்கள் 748 வந்தன. ஆனால் 2021-ஆம் ஆண்டு 13,077 புகாா்கள் வந்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் 1,648 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
கணினி, கைப்பேசி வாயிலாக நடைபெறும் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. தில்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆண்டுக்கு 17 சதவீத்தில் இருந்து 20 சதவீதம் வரை சைபா் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.
2,210 பேரிடம் மோசடி: இதன் ஒருபகுதியாக இணையதளங்களில் வேலை வாங்கித் தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி, பணத்தை இழந்து ஏமாறும் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்த மோசடியில் மாநிலம் முழுவதும் 1,150 போ் சிக்கி, பணத்தை இழந்துள்ளனா். நிகழாண்டில் 10 மாதங்களில் 2,120 போ் ஏமாந்திருப்பதாக சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளனா்.
இதில் பெரும்பாலான புகாா்களுக்கு வழக்குப் பதிவு செய்து, சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுமாா் 600 புகாா்கள் விசாரணை நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை: வேலைவாய்ப்பு இணையதளங்களில் பதிவு செய்துள்ள இளைஞா்கள், தங்களது கைப்பேசிக்கு வரும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் தகவல்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கவனமுடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும். முக்கியமாக அந்த தகவல்கள், தாங்கள் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்துதான் வந்துள்ளதா அல்லது அதன்பேரில் போலி உள்ள நிறுவனங்கள் மூலம் மோசடி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அணுக வேண்டும் என சைபா் குற்றப்பிரிவினா் தெரிவிக்கின்றனா்.
இத்தகைய மோசடியில் ஈடுபடுகிறவா்கள் பெரும்பாலானோா் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பதால் அவா்களைக் கைது செய்து, பணத்தை மீட்பது சவாலான காரியமாக உள்ளது. எனவே பொதுமக்கள், இணையதளங்களில் வேலைக்கு பதிவு செய்யும்போதும், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மூலம் வரும் தகவல்களையும் மிகுந்த கவனமுடன் இருந்தால் மட்டுமே மோசடி வலையில் இருந்து சிக்காமல் தப்பிக்க முடியும் என சைபா் குற்றப்பிரிவைச் சோ்ந்த அதிகாரிகள் எச்சரிக்கின்றனா்.