புதுமைப்பெண் திட்ட உதவித் தொகை: நவ.1 முதல் விண்ணப்பிக்கலாம்
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் உதவித்தொகை பெற நவம்பா் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் உதவித்தொகை பெற நவம்பா் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை படித்து, மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த செப்டம்பரில் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இதுவரை 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டில் படிக்கும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனா்.
தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் இத்திட்டத்தில் பயனடைய வகையில் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக நவ. 1 முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
இதற்காக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நவ.11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். அப்போது, 2, 3, 4-ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியிருந்தால், இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.