கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்!
கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டுகளை சில மர்ம நபர்கள் வீசிசென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டுகளை சில மர்ம நபர்கள் வீசிச் சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் சுருளி அருவி சாலையில் அரசு வங்கி, தனியார் தொடக்கப்பள்ளி, சர்ச் மற்றும் சாலையோரத்தில் வீடுகள் உள்ளன.
வெள்ளிக்கிழமை அதிகாலை மக்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தனர், சாரல் மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது தீடீரென்று டமார் என்று சத்தம் கேட்டது, உறங்கியவர்கள் எழுந்து பார்த்தபோது சிலர் சத்தம்போட்டுக்கொண்டே ஓடியுள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூடினர். இதுபற்றி ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட ஏ.எஸ்.பி.ஸ்ரேயாகுப்தா தலைமையில் போலீசார் வந்தனர்.
வீட்டுக் கதவு, ஜன்னல், பூஜை அறை, சாக்கடை, சர்ச் வாசல் ஆகிய இடங்களில் 6 வெடிகுண்டுகள் வெடித்துக் கிடந்தது. போலீசார் இதை ஆய்வு செய்த போது நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்தது. துப்பறியும் மோப்பநாய் வெற்றி மோப்பம் பிடித்து காமயகவுண்டன்பட்டி சாலை வழியாக சென்றது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழுவாக இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மேலும் திருமண விழாவில் பிளக்ஸ் போர்டு வைத்ததிலும் மோதல் ஏற்பட்டது, இதன் காரணமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.